லோக் சபா தேர்தலின்போது, தமிழகம் மற்றும் புதுவையில் 45 நாட்கள் வேனில் வலம் வந்து 30,000 கிலோ மீட்டர்களை கடந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சூறாவளி பிரசாரம் செய்தார். வெற்றி வாய்ப்பை இழந்தாலும் 10 சதவீத ஓட்டுக்களை பெற்று தே.மு.தி.க., தன்னை முக்கிய கட்சியாக தமிழகத்தில் அடையாளம் காட்டிக்கொண்டுள்ளது.
தோல்வியால் விஜயகாந்த் துவண்டு விடுவார் என எதிர்பார்த்த நிலையில், வேட்பாளர்களை கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து விருந்து வைத்து அசத்தினார். மேலும் அவர் ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலர்களுக்கும் பிரியாணி விருந்து கொடுத்து தேர்தல் தோல்வி குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தேர்தல் பிரசாரம், ஆலோசனை கூட்டம் என அரசியல் பரபரப்பில் இருந்த விஜயகாந்தால், ஆண்டுதோறும் மே மாதத்தில் குடும்பத்தினருடன் வெளிநாடு பயணத்தை இந்தாண்டு மேற்கொள்ள முடியாமல் போனது. இந்நிலையில் வரும் 10ம் தேதி ஓய்விற்காக, தனது குடும்பத்தினருடன் மொரீஷியஸ் தீவு செல்ல விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். விசா அனுமதி பெறுவதற்கு அவர் காத்திருப்பதால் வெளிநாடு செல்வது ஓரிரு நாட்கள் தாமதமாகும் எனவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டில் ஒரு வாரத்தை குடும்பத்தினருடன் கழிக்கும் விஜயகாந்த், அதன்பிறகு தானே இயக்கி நடிக்கவுள்ள 'விருதகிரி' பட ஆலோசனையில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பின் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' என்ற படத்தை தூசி தட்டி நடிக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
வரும் 18ம் தேதி முதல் நடக்க இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
மொரீஷியஸ் ஓய்வை முடித்துக்கொண்டு குடும்பத்தினருடன் சென்னை திரும்பும் விஜயகாந்த், வழக்கம்போல் ஒரு நாள் மட்டும் சட்ட சபை கூட்டத்தொடரில் பங்கேற்று, மீண்டும் வெளிநாடு செல்வார் எனவும் அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மாநில நிர்வாகிகளும் வெளிநாடு பயணம்
தே.மு.தி.க., வேட்பாளர்கள் மற்றும் அடிமட்ட நிர்வாகிகளுக்கு விருந்து வைத்து அசத்திய விஜயகாந்த், மாநில நிர்வாகிகளுக்கு இன்ப அதிர்ச்சி தர திட்டமிட்டுள்ளார். தான் குடும்பத்தினருடன் வெளிநாடு செல்வதை போல சில மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய சொந்த செலவில் அவர்களையும் வெளிநாடு சுற்றுலாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார்.
இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத இந்த அதிரடி ஏற்பாட்டை, குவைத்தை சேர்ந்த தனது நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் விஜயகாந்த் செய்து வருவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment